தலைவரே! நீங்கள் சாகும்முன்

Posted by மோகன் கந்தசாமி on Friday, May 20, 2011

திமுக -வின் மாஜி அனுதாபியாக சிலவற்றை கூற விரும்புகிறேன் தலைவரே. மற்றெந்த தேர்தல் தோல்வியையும் விட உமக்கு இது மிக நோயுறு வேதனையைத் தந்துவிட்டதாய் தோன்றுகிறதெனக்கு. எனக்கு உங்கள் மீது எள்ளளவும் அக்கறை கிடையாது. ஆனால் திமுக மீது எப்போதும் உண்டு.

2001 சட்டமன்ற தேர்தல் தோல்வியின்போது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஒருங்கே கேலி செய்தனரே, நினைவிருக்கிறதா? எதிரிகள் இனி திமுக எழாது என்றனர், நண்பர்கள் கலைஞருக்கு வெற்றி சலித்துவிட்டது;இனி போராட மாட்டார் என்றனர். இப்போது அவர்கள் கூற்று நிஜமாகப் போகிறது. திமுகவை தனிமனிதனாகத் தழைக்கச்செய்தவர் நீங்கள். நிழல் தரு மரத்தடியினின்று நாங்கள் விரட்டப்பட்டு உறவினரும் அல்லக்கைகளும் ஆக்கிரமித்துக் கொண்டபோதும் சிறு பொருமலோடு சகித்துக்கொண்டோம். இன்றோ அவர்கள் மரத்திலேறி கவை கவையாய் கழிக்கும் போது வெறியேற்படுகின்றதய்யா! தருணம் பார்த்து அயலான் வேறு வேரறுக்கத் துணிந்துவிட்டான்.



உங்கள் ஆளுகையின் கீழ் உங்கள் உறவினர்கள் இல்லை என்றபோதும் எமக்கு கவலை ஏற்படவில்லை. உம்மை ஏக வசனத்தில் உம்மக்கள் ஏசுவதும், உம் பேச்சை ஏளனத்துடன் அவர்கள் உதாசீனப் படுத்துவதும் அறிவாலய கிசு கிசு என்று நிராகரிக்க முடியாது. அது முற்றுண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். உமக்கு தெரியாமல் நடக்கும் அல்லது நடந்த பின் தெரியவரும் தவறுகள் மலிந்துவிட்டன திமுகவில். இவற்றை களைய உம்மால் நிச்சயம் முடியாது. அவை களையப்படாமல் திமுக காலத்தை ஒட்டிவிட முடியும்; ஆனால் அது முன்னாள் காதலியை வேசியாக தெருவில் பார்க்கும் உணர்வைத்தான் தரக்கூடும்.

எதிரியுடன் கள்ள பேரம் ஏதுமின்றி நம் இனத்தை காட்டி கொடுக்கத் துணிந்திருக்க மாட்டீர்கள். உம்மை வைத்து அவன் நம் இனத்தை அழித்துவிட்டு இன்று உம்மையும் சீண்டுகிறான். நீங்கள் முற்றாக ஏமாந்துவிட்டீர்கள். நேற்று பெய்த மூத்திரத்தில் இன்று முளைத்த கள்ளிச் செடி திமுகவிற்கு ஆட்டம் காட்டுகிறது. இதெல்லாம் உமக்கு தேவையா என்பதை விட திமுக -விற்கு தேவையா என்று மல்லாந்து படுத்து மனசாட்சியை கேட்டுப்பாருங்கள், நிச்சயம் மார்மேலே காறித் துப்பிக்கொள்வீர்கள்.

இனி நான் சொல்வதை கேளுங்கள். உங்கள் மகளை சிறிது காலத்திற்கு மறந்து விடுங்கள். திமுகவை எங்களிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். காங்கிரஸ் கதறக் கதறக் கருவறுக்கப் படுவதை கண்டு ரசியுங்கள். தமிழகத்திலிருந்து விரட்டிச் சென்று டெல்லியில் பொய் அதற்கு சமாதி கட்டுகிறோம். திமுகவின் குருதியை சுத்திகரித்து வீறுகொண்டு எழச்செய்கிறோம். நீங்கள் மழுங்கடித்த தமிழுனர்வை நாங்கள் முனைப்பாக்கித் தருகிறோம். குறுநில மன்னர்களை அடக்கி வழிக்கு கொண்டுவருகிறோம். இறுதியில் உங்கள் அருமை மகளை நாங்கள் மீட்டுத்தரும்போது ஒரு தந்தையாக, தாத்தாவாக அமைதியாக காலத்தை கடத்தலாம்.

யோசிப்பீர்களா?!

DMK -சில மொக்கை ஜோக்ஸ்

Posted by மோகன் கந்தசாமி on Monday, July 26, 2010

கீழ்க்கண்டவற்றை ஜோக்ஸ் என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் மற்றும் சிரிப்பு வராதவர்கள் http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvUஇந்த இணைப்பில் சென்று தற்காலிகமாக சிரித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



உடன்பிறப்பு: 'எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும், அப்போதான் சிந்தனை விரிவாகும்' அப்படின்னு பெரியார் சொல்லி இருக்கார். அதனால நிறைய கேள்வி கேட்கணும் தெரிஞ்சுதா?
மகன்: சரிப்பா!! கடல் நீர் ஏன் உப்பு கரிக்குது?
உடன்பிறப்பு: போன ஆட்சியில உப்பு கரிச்சுது. அதனால இப்பவும் உவர்ப்பா இருக்கு.
மகன்: சரி, வானம் ஏன் நீலநிறமா இருக்கு?
உடன்பிறப்பு: போன ஆட்சியில் இப்படித்தான் இருந்துச்சு. அதனால இப்பவும் அப்படித்தான்.
மகன்: ...................
உடன்பிறப்பு: ஏன்டா, கேள்வி அவ்வளவுதானா? கேள்வி கேட்டாதான் அறிவு வளரும்னு சொல்லி இருக்கேன் இல்ல!
மகன்: ஆ! ?$!!?



தலைவர் கடிதத்தை பார்த்துட்டு பிரதமர் பயங்கர டென்சன் ஆயிட்டாரமே!
தமிழக மீனவரை காப்பாற்றுங்கள், அல்லது நோட்டடிக்கிற மிஷின் ஒன்றை அனுப்புங்கள் என்று எழுதியிருந்தாராம்!! அதான்.



தொகுதி எம்.எல்.ஏ செத்து ரெண்டு மாசமாகுது, தொகுதி மக்களெல்லாம் இப்போ போய் அவர் சமாதியில் மாலை போடறாங்களே ஏன்?
ரெண்டு மாசம் கழிச்சு தொகுதிக்கு இப்பதான் இடைத்தேர்தல் அறிவிச்சிருக்காங்க, அதுக்கு நன்றி செலுத்தத்தான்!!!



ஒரு மீடியம் சைஸ் பீட்சா, தமிழ்நாடு - இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு குடும்பத்திற்கு ஒருவேளைக்கு ஒரு மீடியம் சைஸ் பீட்சா போதும். ஆனால் தமிழ்நாடு போதாது.

வலைப்பூக்களில் எழுதிவரும் திமுக ஆதரவு பதிவர்கள் சிலர் தங்கள் கட்சி, மற்றும் பதிவுலக செல்வாக்குகளை பயன்படுத்தி பதிவர் சவுக்கை விடுதலை செய்ய ஆலோசனை செய்து வருவதாக கேள்விப்பட்டபோது மனம் கனத்தது. அவர் விடுதலை ஆகும் மறுநாள் வரை தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருப்பது என்றும் முடிவு செய்துள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

சீரியஸாக, திமுகவின் அசகாய சூர தீரங்களையும், சாணக்கிய சவுண்டித்தனங்களையும் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விலாவாரியாக வியாக்கியானம் செய்யும் உடன்பிறப்புகள் சவுக்கு கைது விசயத்தில் என்ன சப்பைகட்டுடன் வருவார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இவ்வாறு நடைபெற்ற முன்னுதாரணம் இருக்கும்போது திமுக ஆட்சியில் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்ற மொள்ளமாரித்தனமான வாதத்துடன் ஏதாவது திமுக ஜீவி வரக்கூடும். பிறகு அடுத்த திமுக ஆதரவு பதிவு எழுதும் முன் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் தார்மீகத்தை இந்த புனிதர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ன? தமிழரை கொன்றுவிட்டு தமிழருக்காகவே வாழ்கிறேன் என்று ஒரு சொரனையற்ற பொய்யை திரும்பத்திரும்ப தலைமை ஊளையிடும் போது தரங்கெட்ட அதிகாரிகளிடமும் தறுதலை தொண்டர்களிடமும் அந்த தார்மீகம் இருக்க வாய்ப்பில்லை.

அதிமுக ஆட்சியில் இப்படி ஏதேனும் நடந்தால் கண்டனம் தெரிவிப்போமா? இல்லை. ஏன்? ஏனெனில் அதில் பிரயோஜனம் இல்லை. அவர்கள் கோழைகள். கேள்விகளை கண்டு அஞ்சுபவர்கள். அடியாட்கள் மூலம் பதில் சொல்லிவிட்டு அடுத்தடுத்து அதையே செய்வார்கள். அவர்களுக்கு ஓட்டுபோடும் அடிமுட்டாள்களுக்கும் அது தெரியும். அதனால் அதிமுக தலைமை அதை வெளிப்படையாகவே செய்யும். இப்போது மட்டும் ஏன் கண்டனம் தெரிவிக்கவேண்டும்? பயன் உண்டா? நிச்சயமாக இல்லை. இவர்களும் வேறானவர்கள் இல்லை. பதிலளிக்க பயப்படுவார்கள். அல்லக்கைகளை ஏவுவார்கள். ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு தெரியாது. திமுக அதிமுக போல அராஜக கட்சி அல்ல என்றே அப்பாவியாக கருதும் கூட்டத்தினர்கள் இவர்கள். பல்வேறு வேடங்களில் நாள்தோறும் கூத்துகட்டும் திமுக தலைமை தொடர்ந்து அவ்வாறு நடித்துவருகிறது. அதன் முகத்திரையை கிழிக்க இந்த கண்டனங்கள் அவசியமாகின்றன.



பதிவுகளில் வைத்து இவர்களை டவுசர் அவிழ்த்தால் அதன் பிறகாவது யோசிப்பார்களா என்றால், நிச்சயம் இல்லை. உடுக்கை இழந்தவன் கை மறைக்கவேண்டிய இடத்தை மறைக்காமல் முகத்தை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அம்மணமாகவே தொடரக்கூடும். ஒருவேளை அதுகள் யோசிக்கவும் கூடும். நம் கடன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு கூடவே வைது வைப்போம். தற்போதைக்கு நம் கடமையை செய்துவிட்டு நம் காலத்திற்கு காத்திருப்போம்.

இந்தியா, எரிச்சலூட்டும் கோமாளி

Posted by மோகன் கந்தசாமி on Wednesday, May 27, 2009

இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. இதற்கு அன்றும் இன்றும் அது தந்து வரும் ஒரே பதில் தேச நலன்.

அப்படி என்ன இந்திய தேச நலனை காங்கிரஸ் கட்டிக் காத்துவிட்டது என்றால் தொன்னூறுகளில் மொத்தமாக திவாலாகி துண்டு துண்டாக சிதறவிருந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை மீட்டது ஒன்றுதான். ஏனைய எல்லா சந்தர்பங்களிலும் எதையாவது செய்து எங்காவது சூடு பட்டுக்கொண்டு மக்களை இம்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவது என்பதைத் தவிர மாற்று கொள்கைகளை தேர்ந்தெடுக்க இந்தியா தயாரில்லை அல்லது தைரியமில்லை. தமிழர் நலனை ஒழித்து காஷ்மீரத்தை காப்பதும் இலங்கைக்கு உதவி சீனாவை கட்டுப்படுத்துவதும் தான் இந்தியாவிற்கு தற்போதுள்ள ஒரே வழி என்ற கருத்தை எனது பேராசிரியர் மறுக்கிறார்.

2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.

விடுதலைப் புலிகள் வெற்றிகளை குவித்தபோது அமெரிக்க போர்கப்பல் மத்திய ஆசியப் பகுதியில் நங்கூரமிட்டது. இதனால் நம் கடல் பகுதியில் சீனாவின் எதிர் நடவடிக்கையை எதிர்பார்த்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச்சொன்னது இந்திய அரசு. இதற்கு பதிலாக வேறு உபாயங்களை கண்டிருக்க முடியும் என்றாலும் புலிகள் உடனடியாக கேட்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தது இந்தியா.

அதுபோல் இந்தியாவின் மின்சார தேவை என்ற முற்றிலும் லாஜிக் இல்லாத காரணத்தை கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா இன்று அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளது. தில்லுமுல்லுகள் என்று அந்த ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றையும் குறிப்பிடமுடியாத நிலையில் என்னவோ பரம ரகசியம் போல் பதுங்கிப் பதுங்கி முக்காடு போட்டவாறு அதை டீல் செய்தது. கடைசியில் ஒப்பந்த வரைவை நம் கண்ணில் காட்டியபோது இதற்குத்தானா இந்த பீட்டர் என்று எண்ணத்தோன்றியது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, அதிரடி தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்பு ஏற்பட்டால்தான் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.

இந்தியாவின் கோமாளித்தனத்தை இந்திய மேதாவிகள் வானளாவ புகழ்ந்தாலும் விஷயமறிந்தவர்கள் தலையிலடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். பாஜக ஆட்சியில், ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தை முழு அளவில் தயாராக நிறுத்தி, போர் பயம் காட்டி, சர்வதேசத்தை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது இந்தியா. பத்துவருட ராணுவ பராமரிப்புச் செலவை ஒருவருடத்தில் முடித்துவிட்டு பலனேதுமின்றி படைகளை பின்வாங்கியது. சர்வதேச ஊடகங்கள் எல்லாம் எள்ளி நகையாடிய தருணத்தில் இந்திய வலது சாரி ஊடகங்கள் (வேறு எந்த சாரி -யிலாவது ஊடகங்கள் இருக்கின்றனவா?) வெற்றி முரசு கொட்டின அல்லது குதம் கிழிந்து அவஸ்தை பட்டன. இம்மாதிரியான கோமாளித்தனங்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் பலமுறை செய்திருந்தாலும் இந்திய குடிமகன் என்ற ரீதியில் நாமும் சப்பைகட்டி விட்டு நமக்குள் சிரித்துக்கொள்வதொடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இன்று ஐநா -வில் அடிக்கும் அடுத்த கேலிக்கூத்து நம் வயிறெரியச் செய்கிறது.

லட்சக்கணக்கில் தங்கள் குடிமக்கள் தெருக்களில் ஆர்பாட்டம் செய்துவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின. (அவையெல்லாம் ஜனநாயக நாடுகளாம்! மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.

இப்போது மொத்த பேரும் ஈழப்பேரழிவிற்கு இந்தியாவை ஒற்றை பொறுப்பாளி (அதுதானே உண்மை!) ஆக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தேசிய இன பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கருதினாலும் இது பற்றி எச்சரிக்கையாகக் கூட வாய்திறக்கவில்லை. ஏற்கனவே மதக்கலவரங்கள் பற்றி இங்கிலாந்து அமைச்சர் ஏதோ 'இந்திய தேசியம்... இந்து-முஸ்லிம்... மாநில அரசு... இந்திய ஒன்றியம்... என்றெல்லாம் வார்த்தைகள் போட்டு அறிக்கை வெளியிட்டுவிட அதற்கு பதிலடியாக இந்தியா 'ராபர்ட் கிளைவ்... கிழக்கிந்திய கம்பெனி... அஸ்தமனம் ஆகிவிட்ட பிரிட்டன்... என்றெல்லாம் வார்த்தைகளைப் போட்டு எதிர் அறிக்கை விட்டு பொரிந்து தள்ளிவிட்டது. இனி எக்கேடு கேட்டாலும் இவர்கள் தலையிடப் போவதில்லை.

இவ்வாறு இந்தியா என்னும் பித்துக்குளி செய்யும் வேலைகள் எல்லாம் தமிழனை காவு வாங்கிக்கொண்டிருக்க, இந்தியாவில் தூண்டப்பட்டு விட வாய்ப்புகள் நிறைய உள்ள தேசிய இன பிரச்சினையை அதன் தலையில் எத்தி, நியாபகம் ஊட்டி, தன் சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.

நேரு எழுதிய இராமாயணம்

Posted by மோகன் கந்தசாமி on Tuesday, May 26, 2009

திராவிட ஆரியப் போரின் மொத்தம் தான் இராமாயணம் என்று ஆசிய ஜோதி ஜவகர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் நமக்கு முன்னமே தெரியும் என்றாலும் இதற்கு நம் முதல்வர் கொடுத்துள்ள விளக்க உரையின் அரும் சொல் பொருள் விளக்கமே இப்பதிவு.

பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தில்லியை தலைநகராகக் கொண்டு பாரத கண்டத்தை ஆண்டுவந்த சூரிய வம்சத்து அரசன் தனது மூத்த மகனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த முடிவெடுத்தான். எதிர்பாராத விதமாக தில்லிக்கு வெகு தெற்கே வாழ்ந்து வந்த சூத்திரர்களுக்கு எதிரான புனிதப் போரில் பட்டத்து இளவரசிற்கு அகால மரணம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் இளவரசி மகுடம் சூட்டி விழா எடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தார்.

பக்கத்து நாட்டு மன்னர்களிடையே கோல் மூட்டுவது, வல்லரசுகளிடம் சென்று இராப்பிச்சை எடுத்து பொருள் சேர்ப்பது போன்றவற்றை கவனிக்க வெளிவிவகாரத்துறை ஒன்றை முதலில் அமைத்தார் பட்டத்தரசி. இளிச்சவாயனைப் போட்டு நொக்குவது, பெரியண்ணன்களைப் பார்த்து பம்முவது போன்றவற்றிற்காக பாதுகாப்புத் துறை ஒன்றை நிறுவிட முடிவு செய்தார். இதர துறைகளை கவனிக்க மற்ற அல்லக்கைகளை நியமித்த கையேடு தமக்கு வெகுகாலமாக கப்பம் கட்டிவரும் திராவிட மன்னர்களுக்கு சில துறைகளை தரவும் முடிவெடுத்தார். ஆனால் சூத்திரர்களுக்கு பதவி கொடுப்பதா என்று ஆங்காங்கே சனாதனிகளிடம் சலசலப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையே, திராவிட தேசத்தில் கவுரவமாக சூத்திரர்களுக்கு **தடித்துக் கொண்டிருந்த ஆரியக் குரங்கு ஒன்று தலைநகருக்கு ஒரே தாவாக தாவிச்சென்று அரண்மனை வாயிலில் டேரா போட்டது. சூத்திரனுக்கு பதவி கூடாதென தனது பஞ்சகட்சத்தை அவிழ்த்துப் போட்டு அம்மணத்துடன் ஆட்டம் காட்டியது. இதைப் பார்த்த மற்ற சனாதனக் குரங்குகள் எல்லாம் சேர்ந்து தாமும் அந்த அம்மண ஆட்டத்தில் கலந்து கொண்டன. இறுதியில் மகாராணி தம் அடிமைகளுக்கு பதவிகள் கொடுத்தாரா இல்லையா என்ற விஷயத்தை நம் ஆசிய ஜோதி சொல்லாமலே விட்டுவிட்டார். இதுதான் நம் மனிதருள் மாணிக்கம் எழுதிய இராமாயணம்.

இது என்ன இராமாயணமா, இல்லை கப்ஸாயணமா என்று கேட்பவர்களெல்லாம் பார்ப்பன அடிவருடிகளாவர். பன்னெடுங்காலமாக நடந்து வரும் திராவிட ஒடுக்குமுறைகளுக்கு துணை போகக்கூடியவர்களாவர். நம் முதல்வரின் வாரிசுகளை பதவி ஏற்க விடாமல் தடுக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் நேருவின் இராமாயணத்தில் வரும் ஆரியக் குரங்குகளின் எச்சங்களே! ஆகவே இந்த எச்சங்களிடமிருந்து நம் எச்சிகளை காக்க வேண்டியது நம்மைப் போன்ற எச்சக்களைகளின் கடமையாகும் என்பதை நாம் உணரவேண்டும்.

நம் தலைவருக்கு ராமாயணத்தை எடுத்துச்சொன்னவர்கள்தான் நமக்கும் சொன்னார்கள். ஆனால் நம் இனத்தலைவரின் வாரிசுகளுக்கு எதிரான சதியை பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தீட்டிய பார்ப்பனர்களின் துர்குனத்தை நம் தலைவர்தானே நமக்கு விளக்கிச்சொன்னார். அடுத்தடுத்த எபிசோடுகளில் டி. ஆர். பாலுவுக்கு எதிரான சதிபற்றி மகாத்மா காந்தி எழுதிய இராமாயணத்தையும், ராவணன் மற்றும் சேதுக் கால்வாய் பற்றி ராஜாஜி எழுதிய இராமாயணத்தையும் நம் தமிழினத்தலைவர் நமக்கு அறிமுகப் படுத்துவார் என்று நம்புவோமாக!

இணைப்பு: தலைவர் அறிக்கை


இருபத்தியாறு வருட உள்நாட்டுப் போரில் ராணுவ ரீதியிலான வெற்றியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை அரசு, ஜெனிவாவில் நாளை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமை கழகத்தின் பதினோராவது சிறப்பு கூட்டத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சந்திக்கவிருக்கிறது.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகள் மீதும் வைக்கப்பட்டிருந்தது. தனி நாடு கோரி போராடி வந்த அந்த அமைப்பு இப்போது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப் படுகிறது.

இருபிரிவினரையும் தண்டிக்கும் முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்திருக்கிறது. நாளை (மே -26) நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு கூட்டம் ஐ. நா மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளால் கூட்டப்படுகிறது. மொத்தமுள்ள 47 நாடுகளில் பதினேழு நாடுகள் (கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர் லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிஸ், பிரிட்டன், சிலி, மெக்சிகோ, கொரியா, மொரிசியஸ், அர்ஜென்டினா, போஸ்னியா, உக்ரையின் மற்றும் உருகுவே) இக்கூட்டத்தை கூட்டியிருக்கின்றன.

இக்கழக கூட்டம் அமைதிக்கான முயற்சியில் பலனேற்படுத்தும் என்று நம்புவதாக அதன் தலைவர் மார்டின் உமொய்பி தெரிவித்தார். இதற்கிடையே மனித உரிமை கழகத்தின் தலையீட்டை தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடுகள் கையெழுத்திட்ட தீர்மானம் ஐ.நா விடம் அளித்திருக்கிறது. அதில் தீவிரவாதத்திற்கு எதிராக வெற்றிகரமாக போராடிவரும் தெற்காசிய நாடுகளின் பங்களிப்புகளை பாராட்டியும் சர்வதேச நாடுகளிடம் நிதி உதவி கோரியும் விண்ணப்பித்திருந்தது. அந்த பன்னிரண்டு நாடுகள் இந்தோனேசியா, சைனா, இந்தியா, சவூதி அரேபிய, மலேசியா, பாகிஸ்தான், பக்ரைன், பிளிப்பைன்ஸ், கியூபா, எகிப்து, நிகரகுவா மற்றும் பொலிவியா ஆகியனவேயாகும். இந்நிலையில், பல அரசு சாரா மனித உரிமை அமைப்புகள் பல ஊடக மறுப்பு மற்றும் பொய்த்தகவல்களை ஆயுதமாக பயன்படுத்தும் செயல்களில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன.

"ஒரு பிரிவினரின் துப்பாகிகள் மவுனமடைந்தபின் நடைபெறும் உயிழப்புகள் அதிக கவனம் பெறுகின்றன. பாதுகாப்பு வளையத்தில் நடைபெறும் கொலைகளுக்கான விளக்கம் திசைதிருப்பலாக உள்ளது. சண்டை நடைபெறும் அல்லது நடைபெற்ற பகுதிகளில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தியை நம்ப வேண்டியதாக உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும் வாய்ப்பு குறைவு" என்று ஐ.நா துணை பொது செயலாளரும், மனித உரிமை கழக ஒருங்கிணைப்பாளருமான ஜான் ஹோல்ம்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எவ்வெப்போதெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நடைபெறுபவை பற்றி கவலை பிறக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தப் பட்டுள்ளன. நமது முக்கிய கவலை வெளியேறிய மக்களின் பாதுகாப்பு குறித்தே ஆகும்." என சென்ற புதனன்று தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வந்துள்ள 2,50,000 மக்களின் உணவு மற்றும் மருந்து தேவையை பூர்த்தி செய்ய முடிந்தவரை ஐநா மற்றும் செஞ்சிலுவை செய்துவருகின்றன. 25,000 தற்காலிக தங்குமிடங்களை அது அமைத்துள்ளது. மேலும் பத்தாயிரம் அமையவிருக்கின்றன. போர் முடிந்த பின் தான் மறு சீரமைப்பை தொடங்க முடியும் என்றும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடியாமல் அது சாத்தியமில்லை என்று கூறிவந்த அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள் மூன்று லட்சம் பேருக்கும் தங்குமிடங்கள் அமைக்கப் படும் என்று இப்போது கூறுவது விந்தையாக உள்ளது. சர்வதேச நிதியை கூறும் இச்சமயத்தில் இப்படியான உறுதிமொழிகளை வெற்றாக கொடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மேலும், மனித உரிமைக்கான மருத்துவர்கள் குழுவில் இருந்த மூன்று தமிழ் மருத்துவர்களை விசாரணை என்ற பெயரில் அரசாங்கம் கைது செய்தபின் இன்னும் வெளிவிடவில்லை. செய்தியாளர்களிடம் தந்த அறிக்கையில் ஹோல்ம்ஸ் அந்த மருத்துவர்கள் செய்துவந்த பணியை பாராட்டியும் அவர்களின் செயல்களை வீரதீரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: இன்டர் பிரஸ் சர்வீஸ்

புனுகைத் தெளித்து ஒப்பேற்றி...

Posted by மோகன் கந்தசாமி on Sunday, May 24, 2009

எருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா? இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா? எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்.

இத்தகு சுகானுபவங்களில் உங்களுக்கு நாட்டமில்லை எனில் அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், அவையெல்லாம் விகார குணங்கள் என்ற புரிதலாவது நமக்கு வேண்டுமல்லாவா? சரி, நம்மை விடுவோம்; கேவலம் நமக்கும் நம் நலன்கள் முக்கியமல்லவா? அதே சமயம், நாம் நம்பியவர்களுக்கு சுரணை மழுங்கியதன் காரணம் எதுவென்று அறிவோமா?

இரண்டரை வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புதிய முதல்வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சென்னையில் சந்தித்தார். இலங்கைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதாகவும், அதற்கு முதல்வரின் ஒத்துழைப்பு வேண்டுமெனவும் அவர் கோரியிருந்தாராம்! அதன் பிறகு அந்த நவீன யுகத்து அனுமன் நம் விபீடணனுக்கும் சீதா தேவிக்கும் இடையே ஒரு சில முறை தூது சென்றிருக்கிறார். இறுதியில் ராவணனை காட்டி கொடுப்பது என்றும் ராமன் பாதியில் விட்டுசென்றிருந்த போரை லவ குஷாக்கள் உதவியுடன் சீதா தேவி தொடர்வது என்றும் பாரத தேசத்தின் தலைநகரில் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது.

ஆயிரமே ஆனாலும் நம் விபீடணன் திராவிடனல்லவா!! ஓசியில் காட்டிக்கொடுக்க அவர் என்ன முற்றும் துறந்த முனிவனா? குடும்பம் குட்டி எல்லாம் உண்டாயிற்றே! மேலும் பிரதி பலனின்றி அடிவருட அவரென்ன அல்லக்கையா? அவரது விரல் அசைவில் தமிழினத்தை அடக்கி வைத்திருக்கும் அசுரனாயிற்றே! இப்படி சில பல சமரசங்களுக்குப் பின் இறுதியில் டீல் இனிதே முடிந்தது. இவ்வாறாக, தமிழனின் சுரணையை மழுங்கடிக்கும் பணி விபீடணனுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்பட்டது.

இதோ அங்கே களத்தில் சோலி முடிந்து போயிற்று! பேசியபடி கூலி கிடைத்து விட்டது. அடுத்து என்ன!... அடுத்து என்னவா? எவ்வளவோ இருக்கு விற்றுத்தீர்க்க! சேது சமுத்திரம் இருக்கிறது, ஹோக்கேனக்கள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. விலை கட்டுபடி ஆகும் வரை விற்கப்பட மாட்டாது. காவிரிக்கு நிகரான விலையை இரண்டிற்கும் தந்தாலொழிய தமிழர் நலன் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். சரி, யாபாரம் படியாமல் காலம் தாழ்த்தினால் என்னவாகும்?... தாழ்த்தட்டுமே! அவர் மட்டுமல்ல, அவர் பிள்ளைகள் விரல் சொடுக்கினாலும் தமிழகம் ஆர்த்தெழுமே! மீண்டும் ஒரு முறை 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற கோஷங்கள் விண்ணை பிளக்கும். திரும்பவும் தமிழ்த்தாய்க்கு ஊறுவிளைவிக்கும் இந்திய தேசியம் கேள்விக்குள்ளாகும். இறுதியில் வடக்கு வாலை சுருட்டிக்கொண்டு கோபாலபுரம் தேடி வரும். உடனடியாக தமிழர் நலன் காக்கப்பட்டு அமளி அடங்கும். அல்லது அடக்கப்படும்.

இதுதான் இன்றைய நிலைமை. குப்பைகளின் மத்தியில் வாசம் செய்வதை போல் அருவருப்பானதாக இருக்கிறது தமிழக அரசியல். இருபது வருடங்களாக அகற்றாத குப்பை தன் முடை வீச்சத்தை தொடங்கிவிட்டது. சிறுகச் சிறுக சேர்ந்த கூளங்கள் மேடாகிப் போயின. புனுகைத் தெளித்து ஒப்பேற்றி வந்த நமக்கு புதிய அணுகுமுறை தேவையாயிருக்கிறது.

Subscribe to: Posts (Atom)