புனுகைத் தெளித்து ஒப்பேற்றி...

Posted by மோகன் கந்தசாமி on Sunday, May 24, 2009

எருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா? இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா? எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்.

இத்தகு சுகானுபவங்களில் உங்களுக்கு நாட்டமில்லை எனில் அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், அவையெல்லாம் விகார குணங்கள் என்ற புரிதலாவது நமக்கு வேண்டுமல்லாவா? சரி, நம்மை விடுவோம்; கேவலம் நமக்கும் நம் நலன்கள் முக்கியமல்லவா? அதே சமயம், நாம் நம்பியவர்களுக்கு சுரணை மழுங்கியதன் காரணம் எதுவென்று அறிவோமா?

இரண்டரை வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புதிய முதல்வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சென்னையில் சந்தித்தார். இலங்கைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதாகவும், அதற்கு முதல்வரின் ஒத்துழைப்பு வேண்டுமெனவும் அவர் கோரியிருந்தாராம்! அதன் பிறகு அந்த நவீன யுகத்து அனுமன் நம் விபீடணனுக்கும் சீதா தேவிக்கும் இடையே ஒரு சில முறை தூது சென்றிருக்கிறார். இறுதியில் ராவணனை காட்டி கொடுப்பது என்றும் ராமன் பாதியில் விட்டுசென்றிருந்த போரை லவ குஷாக்கள் உதவியுடன் சீதா தேவி தொடர்வது என்றும் பாரத தேசத்தின் தலைநகரில் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது.

ஆயிரமே ஆனாலும் நம் விபீடணன் திராவிடனல்லவா!! ஓசியில் காட்டிக்கொடுக்க அவர் என்ன முற்றும் துறந்த முனிவனா? குடும்பம் குட்டி எல்லாம் உண்டாயிற்றே! மேலும் பிரதி பலனின்றி அடிவருட அவரென்ன அல்லக்கையா? அவரது விரல் அசைவில் தமிழினத்தை அடக்கி வைத்திருக்கும் அசுரனாயிற்றே! இப்படி சில பல சமரசங்களுக்குப் பின் இறுதியில் டீல் இனிதே முடிந்தது. இவ்வாறாக, தமிழனின் சுரணையை மழுங்கடிக்கும் பணி விபீடணனுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்பட்டது.

இதோ அங்கே களத்தில் சோலி முடிந்து போயிற்று! பேசியபடி கூலி கிடைத்து விட்டது. அடுத்து என்ன!... அடுத்து என்னவா? எவ்வளவோ இருக்கு விற்றுத்தீர்க்க! சேது சமுத்திரம் இருக்கிறது, ஹோக்கேனக்கள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. விலை கட்டுபடி ஆகும் வரை விற்கப்பட மாட்டாது. காவிரிக்கு நிகரான விலையை இரண்டிற்கும் தந்தாலொழிய தமிழர் நலன் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். சரி, யாபாரம் படியாமல் காலம் தாழ்த்தினால் என்னவாகும்?... தாழ்த்தட்டுமே! அவர் மட்டுமல்ல, அவர் பிள்ளைகள் விரல் சொடுக்கினாலும் தமிழகம் ஆர்த்தெழுமே! மீண்டும் ஒரு முறை 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற கோஷங்கள் விண்ணை பிளக்கும். திரும்பவும் தமிழ்த்தாய்க்கு ஊறுவிளைவிக்கும் இந்திய தேசியம் கேள்விக்குள்ளாகும். இறுதியில் வடக்கு வாலை சுருட்டிக்கொண்டு கோபாலபுரம் தேடி வரும். உடனடியாக தமிழர் நலன் காக்கப்பட்டு அமளி அடங்கும். அல்லது அடக்கப்படும்.

இதுதான் இன்றைய நிலைமை. குப்பைகளின் மத்தியில் வாசம் செய்வதை போல் அருவருப்பானதாக இருக்கிறது தமிழக அரசியல். இருபது வருடங்களாக அகற்றாத குப்பை தன் முடை வீச்சத்தை தொடங்கிவிட்டது. சிறுகச் சிறுக சேர்ந்த கூளங்கள் மேடாகிப் போயின. புனுகைத் தெளித்து ஒப்பேற்றி வந்த நமக்கு புதிய அணுகுமுறை தேவையாயிருக்கிறது.

4 comments:

சரவணன் said...

சரியாகச் சொன்னீர்கள்.

மோகன் கந்தசாமி said...

நன்றி சரவணன்

உதயதேவன் said...

என்ன செய்வது...?
மக்கள் மாக்கள் ஆனர்கள்....
கவர்ச்சி பேச்சு,,,, கவர்ச்சி சினிமா... கவர்ச்சி நடனமனிகள்....
அப்படியே பழகி இன்று
காசும் கட்டிஙும் போதும்...
எதுவும் செய்கிறான்..
தமிழ் நாட்டு தமிழன்....
எதாவது அதிசயம் நடந்தாலன்றி மாறமாட்டான்....
அந்தளவிற்கு அடிமை ஆகிவிட்டான்/ஆக்கபட்டுள்ளான்...

மோகன் கந்தசாமி said...

////ஆக்கபட்டுள்ளான்..///

இது தான் சரி உதய தேவன். நன்றிகள்!!

Subscribe to: Post Comments (Atom)